

சென்னைக்கு 6-ம் தேதி வரச்சொல்லி எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சித் தலைமை அக்கட்சி எம்எல்ஏக்களை 6-ம் தேதி சென்னைக்கு அவசரமாக வர உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்த சூழலில் அதை உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மறுத்துள்ளார். மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிடச் சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘குன்னத்தூர் சத்திரம் சாதாரணமாக இருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவு பெற்றுள்ளது.
28 கோடி ரூபாய் செலவில் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க செலவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாததால் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது. விரைவாக முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னைக்கு 6-ம் தேதி வரச்சொல்லி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. தேர்தல் காலம் என்பதால் ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது வழக்கமானது. ஆளுங்கட்சி குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவலைப் பரப்புகின்றனர்.
ஜனநாயக ரீதியாக போராட்டம் செய்வதை ஏற்றுக்கொள்கிறோம்.
நெருக்கடி காலத்தில் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். முதல்வர் மக்களுக்கான தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறார். அவருக்கு துணை முதல்வரும் உறுதுணையாக இருக்கிறார்’’ என்றார்.