

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களைக் கண்டித்து அக்.12-ம் தேதி 1,000 இடங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று (அக். 3) நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயன்தரும் என்பதில் கடுகளவும் உண்மையில்லை. பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்று நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டின் முதல்வர் அடிப்படையில் விவசாயியாக இருந்துகொண்டு இச்சட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்.
அதேபோல, நூறு ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தும் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது.
இவை இரண்டையும் கண்டித்து வரும் அக்.12 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் 1,000 இடங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் வலுவாக நடைபெறுகிறது என்றால் அங்கு மாநில அரசு ஆதரவு அளிக்கிறது. இங்கே மாநில அரசு போராட்டம் நடத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்கிறது. அவற்றையும் மீறிதான் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், காவல்துறையினரே அவரது சடலத்தை எரியூட்டியுள்ளது கண்டிக்கதக்கது. அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் செல்ல முற்பட்ட நாடறிந்த தலைவரான ராகுல் காந்தியைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்திக் கீழே தள்ளியது கண்டிக்கத்தக்கது.
விவசாயிகள் அறுவடையைத் தொடங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க தாமதமாவதற்குக் காரணம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த நெல்லுக்கான கணக்குகளை இன்னும் முடிக்கவில்லை என்று அரசு கூறுவது பொருத்தமானதல்ல.
அனைத்து இடங்களிலும் போதுமான அளவுக்கு கொள்முதல் நிலையங்களை விரைந்து திறந்து 20 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்" என்று முத்தரசன் தெரிவித்தார்.