Published : 03 Oct 2020 04:49 PM
Last Updated : 03 Oct 2020 04:49 PM

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் காமராஜ் தகவல்  

சென்னை

தமிழக வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாக தமிழ்நாட்டில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020இல் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020இல், 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 5,85,241 விவசாயப் பெருமக்கள் பயனடைந்துள்ளனர். இந்தக் கொள்முதல் அளவானது தமிழ்நாடு வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும். தற்போது, 1.10.2020 அன்று தொடங்கியுள்ள 2020-2021 கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1,888/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,868/- ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

இத்துடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.70/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.50/- வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1,958/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,918/- வழங்கப்படும்.

மேற்கண்டவாறு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னணு இயந்திரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கொள்முதல் பணி 1.10.2020 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 2.10.2020 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாகும்.

எனவே, இன்று (3.10.2020) அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு 4.10.2020 ஞாயிற்றுகிழமை அன்றும் அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, 591 நேரடி கொள்முதல் நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது, சில பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்லானது அறுவடை இயந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டுவரப்படும் நெல்லினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாலித்தீன் தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும் என்பதாலும், அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதாலும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்”.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x