

வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மழைநீர் தேங்கும் குளம், குட்டைகள், கல் கிடங்குளில் சிறுவர்கள் குளிக்கச் செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என அரசு செயலர் மதுமதி அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலை வகித்தார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசு செயலரும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மதுமதி தலைமை வகித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ”வடகிழக்கு பருமழையின்போது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் 144 இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளில் 9 இடங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 54 அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பேரிடர் ஏற்படுகையில் கையாளும் விதம் குறித்தும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கண்மாய்களில் மதகுகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன. 13,905 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.
மழை காலத்தில் 10 கண்மாய்கள் நிரம்பும் என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அதில் ஒரு கண்மாயில் மட்டுமே தண்ணீர் உள்ளது. நீரால் ஏற்படக் கூடிய தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலந்து விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மழை காலங்களில் குழந்தைகளையும் சிறுவர்களையும் பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, மழைநீர் தேங்கும் குளம், குட்டைகள், கல் கிடங்குளில் சிறுவர்கள் குளிக்கச் செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்” என்றார்.
அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்களில் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸாரின் செயல் விளக்கத்தையும், ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து சிக்கிக்கொண்டால் அதை கண்கணிக்கும் நவீன கேமரா மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.