

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
தென்காசியில் திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து காவல் சிக்னல் அருகே தொழிலதிபர் ஜெயபால் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 7-ம் தேதி பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
வீட்டில் தனியாக இருந்த ஜெயபாலின் மனைவியை மர்ம நபர்கள் 2 பேர் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 100 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து தென்காசி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், அந்த சாலையில் உள்ள தனியார் கட்டிடங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், சந்தேக நபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், மற்றொருவர் பர்தா அணிந்தும் சென்று, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், அடுத்த சில நாட்களில் தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தில் பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் நடந்தது.
மேலமெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ரவீந்திரன் என்பவர், தனது வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.
இதை அறிந்த 6 பேர், கடந்த மாதம் 19-ம் தேதி ரவீந்திரன் வீட்டுக்கு காரில் சென்றனர். வீட்டை வாங்க விரும்புவதாகவும், வீட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய ரவீந்திரன், அவர்களை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். அப்போது அந்த நபர்கள், ரவீந்திரனையும், அவரது தம்பி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, கட்டிப் போட்டுவிட்டு 106 கிராம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. பல நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் சிக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்காசி, மேலமெஞ்ஞானபுரத்தில் நடந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்” என்றார்.