

கிருஷ்ணகிரியில் நேற்று கனமழை பெய்தது. அப்போது பழைய எல்ஐசி கட்டிடத்தின் சிலாப் பகுதி இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் நேற்று மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து வெளியேறியது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.
கனமழையின் போது கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள பழைய எல்ஐசி அலுவலக கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்த சிலாப் முழுவதும் இடிந்து கீழே விழுந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சிலாப் விழுந்ததில் கீழ் தளத்தில் இருந்த கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதமானது. மேலும், அச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை பெய்த கனமழையால் மைதானம் முழுவதும் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இரவில் விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்த விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதியுற்றனர். மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்ததால், மழைநீர் வடியும் வரை சிறு வியாபாரிகள் காத்திருந்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 319 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 472 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 42 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணை யில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் மற்றும் ஆற்றில் விநாடிக்கு 114 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 758 கனஅடியாக நீடித்து வருகிறது.
அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 39.69 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றிலும், பாசனக் கால்வாய்களிலும் விநாடிக்கு 648 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.