கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்தது தேவையற்றது: பா.ஜ.க. துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கருத்து

கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்தது தேவையற்றது: பா.ஜ.க. துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கருத்து
Updated on
1 min read

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோவை வைசியாள் வீதியில் காந்தி சிலைக்கு, பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர், அசோக் நகர் அதிர்ஷ்ட விநாயகர் கோயிலில் இருந்து அவர் துளசி யாத்திரையை தொடங்கினார். மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரிகிரிஷ், உக்கடம் மண்டல தலைவர் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக அரசு காந்திஜெயந்தி தினத்தன்று நடக்க இருந்த கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்தது தேவையற்றது. கிராமப்புற பகுதிகளில், கரோனா பாதிப்பு குறைவு என்ற நிலையில், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கூட்டத்தை நடத்தி இருக்கலாம்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றினால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கிராமசபைக் கூட்டங்களை நடத்தியிருந்தால், வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாஜக சார்பில், துளசி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவில் தற்போது நிலவுவது உள்கட்சி விவகாரம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in