

கிராமசபை கூட்டம் கிராம வளர்ச்சிக்கே எனவும், கரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக அல்ல எனவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 3) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக அரசு கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு துறைகள் மூலம் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், சில இடங்களில் முன்னேற்றம் இருந்தாலும் பல இடங்களில் கரோனா தொற்றின் எண்ணிக்கை எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு குறையவில்லை. இன்னும் சில மாதங்களுக்கு இது தொடரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் மக்களுடைய பொருளாதாரம் உயர, அவர்களுடைய வாழ்வாதார உயர்வுக்காக, பேருந்துகள், ரயில்கள், கடைகள் திறப்பதற்கான நேரம் நீடிப்பு என்று பல தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்துக் கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக கூட ஒருசில வாரங்களாக பலர் கட்டுப்பாடு இல்லாமல், இயல்பாக வெளியே வருவதால் கரோனா தொற்று மேலும் பரவுகிறது. இருந்த பொழுதும் மக்கள் மிகுந்த பாதுகாப்போடும், அச்சத்தோடும் தங்களுடைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் தான் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலே அரசு செயல்பட வேண்டும் என்ற ரீதியில் கிராம சபை கூட்டங்கள் கூடாது என்று ரத்து செய்தது.
இந்த நடவடிக்கை கரோனாவால் மேலும் கிராம மக்கள் புதிய அளிவிலே பாதிக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காக தான். ஆனால், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கிராம சபை கூட்டங்கள், பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தும் ஒரு நடுநிலையான ஒர் இடம் என்பதை மறந்து, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக கிராம சபை கூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துகளை அரசுக்கு எதிராக, மக்களிடம் திருப்பிவிடுவதற்கான ஒரு களமாக பயன்படுத்தப்படுகிறது.
கிராம சபை கூட்டங்களை அரசியல் கட்சிகளுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்த நினைப்பது கிராமங்களின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது. மேலும், கரோனா கிராமங்களில் பரவுவதற்கான மற்றோரு சூழலாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.
தமிழக எதிர்க்கட்சிகள் கிராம சபை கூட்டம் நடத்துவது அதன் வளர்ச்சிக்கு முக்கியம் என்றாலும் கூட கரோனாவை கருத்தில் கொண்டு அதில் அரசியலை புகுத்தாமல், சட்டத்திற்கும் மக்கள் பாதுகாப்புக்கும் உட்பட்டு நடப்பதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதை தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்துகிறது".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.