

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி சார்பில் இணையவழியில் நேற்று 16-வது நானி பல்கிவாலா மாதிரி வரி நீதிமன்றப் போட்டியையும், சி.நடராஜன் சட்டவியல் ஆய்வு இருக்கையையும் தொடங்கி வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியது:
வரிச் சட்ட வழக்குகளில் நானி பல்கிவாலா, சி.நடராஜனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர் முன்னிலையில் நடந்த புகழ்பெற்ற பதிப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் நானி பல்கிவாலா இரண்டாவது பிரதிவாதியாகவும், சாட்சியாகவும் ஆஜராகி வாதிட்டு, இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞராக உயர்ந்தார். தமிழ்நாடு விற்பனை வரியில் முன்னணியில் இருந்த காலத்தில் சி.நடராஜன் சிக்கலான வரி நீதியில் வரையறைகளை வடிவமைத்தார். இருவரும் நீதித் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்தனர் என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான என்.வெங்கடராமன் சிறப்புரையாற்றினர். சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம் பேசும்போது, “புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஆய்வு இருக்கை மூலம் சாஸ்த்ரா சட்டப் பட்டதாரிகளுக்குப் பொது மற்றும் குறிப்பிட்ட சட்டத்தில் வளர்ந்துவரும் வரையறைகளில் வழக்காடும் திறன், தொழில் ரீதியான மாண்புகள் தொடர்பாக அவ்வப்போது நிகழ்வுகள் நடத்தப்படும்” என்றார்.
சிக்கலான சர்வதேச வரி சட்ட முன்மொழிவுகளை மையமாகக் கொண்ட இந்த மாதிரி நீதிமன்றப் போட்டியில் தேசிய அளவில் 16 முன்னணி சட்டவியல் பள்ளிகள் பங்கேற்றுள்ளன.