

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடி அரசு எதை செய்தாலும் பொய்களையும் வதந்திகளையும் பரப்புவது எதிர்க்கட்சிகளின் வாடிக்கை. வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என பிரதமர் தெளிவுபடுத்திவிட்டார்.
விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசின் வேளாண் சட்டத்தை உண்மையான விவசாயிகள் வரவேற்கிறார்கள். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத ஸ்டாலின், சிதம்பரம் போன்றவர்கள் வேளாண் சட்டம் குறித்து வீம்புக்கு எதையாவது பேசுகிறார்கள். மோடி அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது. விவசாயிகள் நன்றாக இருக்கக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கிறார்கள்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை விமரிசிப்பவர்கள் பைத்தியக்காரர்கள். உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் போலீஸாரால் ராகுல் காந்தி தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுவது பொய். அவரே கீழே விழுந்து நாடகமாடினார். நாடகமாடிய அவரை போலீஸார் கைது செய்ததில் தவறு இல்லை என்றார்.