கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 2018-19 ஆண்டில் தனியார் பள்ளிகளுக்கு ரூ.303.70 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 2018-19 ஆண்டில் தனியார் பள்ளிகளுக்கு ரூ.303.70 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வித்தொகையாக 2018-19 கல்வி ஆண்டில் ரூ.303.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வி ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி செலவுத் தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கம் அளிக்கவும், 3 ஆண்டுகளுக்கான தொகையை 6 வாரங்களில் வழங்கி அதுதொடர்பானஅறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு ப்ளீடர் சி.முனுசாமி ஓர் அறிக்கைதாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:

அரசுப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகை அல்லது கல்விக்கட்டண நிர்ணயக் குழு தனியார் பள்ளிகளுக்கு கட்டணமாக நிர்ணயிக்கும் தொகை,இதில் எது குறைவோ அதை அடிப்படையாக வைத்தே கல்விஉரிமைச் சட்டத்தின்கீழ் தனியார்பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு அரசு சார்பில் நிதி விடு விக்கப்படும்.

2018-19 கல்வி ஆண்டில் அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்காக வழங்கவேண்டிய ரூ.303.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு விட்டது.

கட்டண விகிதம் சரிபார்க்கப்படும்

2019-2020 கல்வி ஆண்டைப்பொறுத்தவரை தற்போதுதான் அரசுப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி, தனியார்பள்ளிகள் அரசிடம் கோரியுள்ளகட்டண விகிதங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய தொகை விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in