Published : 03 Oct 2020 06:53 AM
Last Updated : 03 Oct 2020 06:53 AM

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரை ஆலோசனை; அதிமுகவில் தொடரும் சமரச முயற்சிகள்: அக்.6-ல் எம்எல்ஏக்கள் சென்னை வர உத்தரவு என்ற தகவலால் பரபரப்பு

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க சமரச முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, முதல்வர் வேட் பாளர் தொடர்பாக வரும் 7-ம் தேதி ஆலோசனை நடக்க உள்ள நிலையில், எம்எல்ஏக்கள் அனைவரும் 6-ம் தேதி சென்னை வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சி களும் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும்கட்சி யான அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை உடனடியாக அறிவித்து தேர்தலை சந்திக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி தரப்பும், தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யலாம் என துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தி வருகின்றன. அண்மையில் நடந்த அதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினை எழுந்தது. அப்போது, அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்பின்போது, ஒப்புக்கொண்டபடி 11 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண் டும். அதில் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதை முதல்வர் பழனிசாமி தரப்பு ஏற்கவில்லை. இதையடுத்து, கட்சியின் செயற்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளு டன் கடந்த 28-ம் தேதி அதிமுக செயற் குழு கூடியது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் இடையே நேரடியாக காரசார விவாதம் நடந்ததாக கூறப்பட்டது. முடிவில், முதல்வர் வேட் பாளர் யார் என்பதை அக்.7-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து அறிவிப்பார்கள் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதன்பிறகு ஓபிஎஸ் தனது ஆதர வாளர்களுடன் தொடர்ந்து 3 நாட்களாக ஆலோசனை நடத்தினார். அதே நேரத் தில் முதல்வர் பழனிசாமியும் அமைச்சர் களுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் இரு தரப்பினரிடமும் பேசி வந்தனர். மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோ சனை, மாநகராட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவுநாள் நிகழ்ச்சி களில் முதல்வருடன் ஓபிஎஸ் பங்கேற் றார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மக்களவை முன்னாள் துணைத் தலைவருமான மு.தம்பிதுரை சந்தித்துப் பேசினார். கட்சியில் நிலவும் பிரச்சினை குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசித்தனர். அதேநேரத்தில் முதல்வர் பழனிசாமியை அவரது வீட் டில், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு தரப்பிலும் தனித்தனியாக ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருவதால், 7-ம் தேதியாவது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்தது.

வழிகாட்டுதல் குழு

இதற்கிடையே, முதல்வர் வேட் பாளர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பிலும் தொடர்ந்து சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக் கையை ஏற்க இபிஎஸ் தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனால், பிரதிநிதித்துவ அடிப்படையில் குழுவில் யார், யார் இடம் பெறுவது என்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாகவே ஓபிஎஸ்-ஐ தம்பிதுரை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி ஆதரவு அமைச்சர்களில் முக்கியமான இருவர், கட்சி வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற முயற்சித்து வருகின்றனர். இதுதவிர சீனியர்கள் சிலரும் தங் களுக்கு இடம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்த சிக்கலுக்கு முடிவு எட்டப்படும் பட்சத்தில், பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும், ஓபிஎஸ்-க்கு கட்சியில் அதிகாரங்கள் கொண்ட பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக வரும் 7-ம் தேதி ஆலோசனை நடக்க வுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக் கள் அனைவரையும் 6-ம் தேதி சென் னைக்கு வருமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவின் சமூக வலைதள பக்கத் தில் இதுதொடர்பான அறிவிப்பு வெளி யானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, எம்எல்ஏக்களை வருமாறு கூறியிருப்பது ஏன் என்ற குழப்பம் எழுந்தது. இது தொடர்பாக சில எம்எல்ஏக் களிடம் கேட்டபோது, ‘‘எங்களை வரச் சொல்லி இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. கட்சியின் முக்கியமான கூட்டம் நடக்கும்போது, பெரும்பாலான எம்எல்ஏக்கள் சென்னைக்கு வருவது வழக்கமானதுதான்’’ என்றனர்.

இந்நிலையில், நேற்று அரசு நிகழ்ச்சி களில் பங்கேற்ற துணை முதல்வர் ஓபிஎஸ், பின்னர் தனது சொந்த ஊரான தேனி புறப்பட்டுச் சென்றார். வரும் 5 அல்லது 6-ம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அவர் வருவதற்கு முன்பு, தற்போது தொடரும் சிக்கல்களுக்கு முடிவு எட்டப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x