இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு பேச்சு நடத்துங்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு பேச்சு நடத்துங்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
Updated on
1 min read

இலங்கை அதிபரோடும், பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில், "இலங்கைப் பிரதமராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரம சிங்கே அவர்கள் அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன்.

இந்த மாத மத்தியில் ரணில் விக்ரம சிங்கேவும், அக்டோபர் மாதத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் டெல்லிக்கு வருகை தரவுள்ளார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதொரு தீர்வு காண வேண்டுமென்று 1956-ம் ஆண்டிலிருந்தே திமுக குரல் கொடுத்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.

எனவே இலங்கைத் தமிழர்களுடைய மனக் குறைகளைத் தேவையான போதெல்லாம் உரிய அரங்குகளில் தகுந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான கடமை எனக்கு உண்டு.

இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கருத்திலே கொண்டு, இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நடு நிலையோடு ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலகச் சரித்திரத்தில் தனித்தன்மை வாய்ந்த மாபெரும் தேசிய இனம் ஒன்றுக்கு நேர்ந்த சுய மரியாதையற்றதும், கண்ணியக் குறைவானதுமான நிகழ்வுகள் அனைத்தையும் துடைத் தெறிய கருணையுடன் கூடிய ஆக்கப் பூர்வமான அணுகுமுறையினை தாங்கள் மேற கொள்ள வேண்டுமென்று இங்குள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நன்றியுணர்வோடு தங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.

தாங்கள் இலங்கை அதிபரோடும், இலங்கைப் பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் ஊக்கம் அளித்திடும் விளைவுகளுக்கு வித்திடும் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in