

புதூர் அருகே கீழக்கரந்தை, ரகுராமபுரம், வவ்வால்தொத்தியில் ஆகிய இடங்களில் திமுக சார்பில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூர் செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்படி தீர்மானம் நிறைவேற்றப் பட்டு விடுமோ என்ற அச்சத்தோடு, மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற படபடப்போடு, திடீரென கரோனா இருப்பதை கண்டுபிடித்ததை போல் கிராமசபை கூட்டங்களில் முதல்வர் ரத்து செய்துள்ளார்.
ஆனால் அதையும் தாண்டி இந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு எல்லா வகையிலும் மாநில மக்கள் மீது இந்தியைத் திணித்து வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான போட்டியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுவும் மறைமுகமான இந்தி திணிப்பு தான். தொடர்ந்து இதனை எதிர்ப்போம்.
புதிய கல்விக் கொள்கையில் கூட மாணவர்கள் 3 மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என மறைமுகமாக இந்தி திணிப்பதற்கான திட்டத்தை கொண்டு வந்தனர். திமுக முன்னெடுத்து வலியுறுத்தியதால் தமிழக அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இரு மொழிக் கொள்கை தான் தமிழகத்தில் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் நிச்சயமாக இந்தியைத் திணிக்க முடியாது. இன்னும் பல மாநிலங்கள் இந்திக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய இடத்துக்கு வந்துள்ளன.’’என்றார் அவர்.