

காந்தி ஜெயந்தி அன்று சுதந்திரப் போராட்ட தியாகி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் சுதந்திரப்போராட்ட தியாகி குருசாமி. இவருக்கு வயது 90. காந்தியடிகளின் மீது கொண்ட பற்றால் இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். உசிலம்பட்டியில் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
சுதந்திரம் பெற்ற பின்னும் காந்தியடிகளின் கொள்கைகளை கிராமத்தில் உள்ள இளைஞர், பள்ளி மாணவ மாணவிகளிடையே எடுத்து கூறி வந்தார். சுதந்திரதினவிழா, குடியிரசு தினவிழா உள்ளிட்ட விழாக்களையொட்டி பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சுதந்திரப்போராட்டத்தில் எதிர்கொண்ட சவால்கள், நிகழ்வுகளை எடுத்து சொல்வார்.
உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பள்ளி குழந்தைகள் மத்தியில் அவர் ஒரு கிராமத்து காந்தியாகவே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் காந்தி ஜெயந்தியன்று உடல்நலக்குறைவால் இவர் உயிரிழந்தார். காந்தி மீது பற்று கொண்ட இவர், காந்திஜெயந்தி அன்று இறந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.