

2025ம் ஆண்டிற்குள் மார்பக புற்றுநோய் இன்னும் 12 சதவீதம் அதிகரிக்கும் என்று மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இந்த அக்டோபர் மாதம் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. மருத்துவப்பேராசிரியர்கள் ராஜசேகரன், ரமேஷ், மகாலட்சுமி பிரசாத் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
டீன் சங்குமணி தலைமையில் மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின், டீன் சங்குமணி பேசியதாவது:
உலகம் முழுவதும் மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மார்பக புற்றுநோய் பெண்களுக்குதான் அதிகம் ஏற்படும் புற்றுநோயாக உருவெடுத்து வருகிறது. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 2025ம் ஆண்டிற்குள் மார்பக புற்றுநோயின் தாக்கம் இன்னும் 12 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்பித்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சைப்பெற்றுக் கொண்டால் குணபடுத்தக்கூடிய நோயாகும்.
ஆரம்ப கண்டுபிடிப்பு என்பது பெண்களால் மிகவும் எளிதாக பின்பற்ற கூடிய ஒன்று. பெண்கள் தாங்களாகவே மார்பக பரிசோதனை செய்து கொள்ளுதல், மமோகிராம், நுண்ணுசிபரிசோதனை போன்றவை மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலே கண்டுபிடித்து விடலாம். மேலும், தற்போது உள்ள மருத்துவ வளர்ச்சியால் மார்பகத்தை எடுக்காமலே மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும். சமூகத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. அது தவறு. மற்றநோய்களை போல் இதுவும் ஒரு நோய்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.