

மதுரையில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் அரசு அருங்காட்சியகம் சார்பில் 150-வது காந்தி ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கலந்துகொண்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததுடன் காந்தி 150 போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார். மதுரை வானொலி நிலைய முதுநிலை அறிவிப்பாளர் சண்முக.ஞானசம்பந்தம் மாறிவரும் சூழலில் காந்தியத்தின் ஏற்புடைமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளர் க.மு.நடராஜன், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல காந்தி தங்கியிருந்ததும், தன்னுடைய மேலாடையை முதன் முதலாகத் துறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமுமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலை அணிவித்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலையொட்டி, கிழக்குச் சித்திரை வீதியில் உள்ள காந்தி சிலைக்கு டிராஃபிக் ராமசாமி மாலை அணிவித்தார்.
அதேபோல மதுரை காமராசர் பல்லைக்கழகத்திலும் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. காந்தி மதுரைக்கு வந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும், நினைவுச் சின்னங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழகத் துணை வேந்தர் மு.கிருஷ்ணன், ரிஃப்லக்ஷன் ஆஃப் காந்தி என்ற நூலை வெளியிட, முதல் பிரதியை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.சங்குமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சமயங்கள் மற்றும் தத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர் வீரா அழகிரிசாமி, காந்தியியல் ராமலிங்கர் தத்துவத்துறை உதவிப் பேராசிரியர் சு.வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காந்தி பொட்டலில் உள்ள அவரது சிலைக்குக் காங்கிரஸ் கட்சியினரும், சிவாஜி மன்றத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.