

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அஸ்தி பீடத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை சுற்றுலா பயணிகள் பார்த்து மரியாதை செய்தனர்.
காந்தி ஜெயந்தி தினமான இன்று கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கூடி சமூக இடைவெளியுடன் அஞ்சலி, மற்றும் மரியாதை செலுத்தினர். காந்தி ஜெயந்தியின் முக்கிய நிகழ்வான காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி விழும் நிகழ்வை காண சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
மதியம் 12 மணிக்கு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள காந்தியின் அஸ்தி பீடத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. அப்போது அங்கு நின்ற சுற்றுலா பயணிகள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் காந்தி மண்டபத்தில் நின்று மரியாதை செலுத்தினர். சூரிய ஒளி விழுவதை அஸ்தி கட்டத்தின் மேல் வெள்ளை துணி திரையை கொண்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
மேலும் காந்தி மண்டபத்தில் காந்தி படத்திற்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைப்போல் காந்தி மண்டபத்தின் அடுத்துள்ள காமராஜர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சிகளில் எஸ்.பி. பத்ரிநாராயணன், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.
காந்தி மண்டபத்தில் அஸ்தி பீடத்தில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அனுபழகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காந்த காந்தி சிலைக்கும், வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கும் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் எம்.பி.யின் மகன் விஜய் வசந்த், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மற்றும் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் சுரேஷ்ராஜ் எம்.எல்.ஏ., தலமையில் காமராஜர் சிலைக்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ., மற்றும் திமுகவினர் மரியாதை செலுத்தினர். மேலும் தேமுதிக, மற்றும் பிற கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாவட்டம் முழுவதும் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள நடந்தன.