மக்களால் தேர்வாகியும் எதுவுமே செய்ய முடியவில்லை: அடிமைகளாக வாழ்கிறோம்- புதுவை அமைச்சர் வேதனை

அமைச்சர் கந்தசாமி
அமைச்சர் கந்தசாமி
Updated on
1 min read

’மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை. சொந்த கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் திட்டுகின்றனர். அடிமைகளாக வாழ்கிறோம்’ என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:
''புதுச்சேரியில் ஆளுநராக உள்ள கிரண்பேடியின் உண்மையான முகம் தெரிய வேண்டும். அவர் கோப்புகளில் எழுதியவற்றை மக்களிடம் பகிரங்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அவரைப் பற்றிய உண்மை தெரியும்.

புதுச்சேரியில் 10 ஆயிரம் பேர் சம்பளம் பெற முடியாமல் உள்ளனர். 9 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியவில்லை. சொந்தக் கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் திட்டுகின்றனர். அடிமைகளாக வாழ்கிறோம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் இத்தகைய நிலைதான் உள்ளது. சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரியை உயர்த்தினால்தான் சட்டப்பேரவைக்குப் பேச வருவேன் எனச் சொன்னவர்தான் கிரண்பேடி.

முதல்வர், அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட 33 எம்எல்ஏக்களுக்கு ஆண்டுக்கு ரூ.33 கோடி செலவு. ஆனால் ஆளுநருக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி செலவாகிறது. சிக்கனம் பற்றி ஆளுநர் கிரண்பேடி பேசுவார். ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துவிடுவார். எல்லாமே நடிப்புதான். மக்களை ஏமாற்றி விளம்பரம் தேடிக் கொள்வார்.''

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கடுமையாக விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in