Published : 02 Oct 2020 05:37 PM
Last Updated : 02 Oct 2020 05:37 PM

ஊரடங்கிலும் மல்லிகைப்பூ சாகுபடியில் லாபம் ஈட்டும் உசிலம்பட்டி பட்டதாரி இளைஞர்

பட்டதாரி இளைஞர் கே.அழகுமலை

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கே.அழகுமலை, கரோனா ஊரடங்கு காலத்திலும் மல்லிகைப்பூ
சாகுபடியில் வருவாய் ஈட்டி வருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கே.அழகுமலை (34). இவர் பட்டப்படிப்பு படித்தாலும் விவசாயத்திலும் மீதுள்ள ஆர்வத்தால் முழுநேரமாக விவசாயம் பார்த்து வருகிறார். தற்போது கரோனா ஊரடங்கிலும் வேலையின்றிச் சோர்ந்து விடாமல் மல்லிகைப்பூ விவசாயம் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து கே.அழகுமலை கூறும்போது, ''பட்டப் படிப்பு படித்தாலும் முழுமூச்சாக விவசாயம் பார்த்து வருகிறேன். குத்தகைக்கு நிலம் எடுத்துத் தோட்டக்கலைப் பயிர்களான கத்தரி, வெண்டை, அவரை, துவரை பயிர்கள் விவசாயம் செய்து வருகிறேன். எனக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் மல்லிகைப்பூ விவசாயமும் செய்து வருகிறேன். நடவு செய்த 6 மாதத்தில் அறுவடை செய்யலாம். வருடத்தில் மார்கழி, தை ஆகிய பனிக்காலங்களில் மட்டும் பூக்கள் பூப்பது குறைந்து விடுவதால் அறுவடை செய்ய முடியாது. நன்றாகப் பராமரித்தால் சுமார் 10-ல் இருந்து 15 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.

வெயில் காலத்தில் செம்பேன் பூச்சி தாக்குதல், பனிக்காலத்தில் புழு தாக்குதலுக்கு மருந்து அடித்துக் காப்பாற்றிவிட்டால் ஆண்டுக்கு 2 மாதம் தவிர மற்ற மாதங்களில் பலன் அடையலாம். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 கிலோ முதல் 50 கிலோ வரை அறுவடை செய்யலாம். ஒருநாளைக்குக் குறைந்தது ரூ.1000 வரை கிடைக்கும். பூக்களுக்குத் தட்டுப்பாடுள்ள காலங்களில் ஒரு கிலோவுக்கு ரூ. 4 ஆயிரம் வரை கிடைக்கும். தற்போது கரோனா ஊரடங்கு காலத்திலும் கை கொடுத்தது மல்லிகைப்பூதான். மற்ற நேரங்களில் கொடைரோடு பகுதியில் உள்ள மல்லிகைப்பூ செண்டு தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒருகிலோ ரூ.100க்கு கொடுத்து விடுவோம். இதன் மூலம் இழப்புகளை ஈடுகட்டி விடுவேன்'' என்றார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் மல்லிகைப்பூ விவசாயம் செய்யும் பட்டதாரி இளைஞர் கே.அழகுமலை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x