Published : 02 Oct 2020 03:05 PM
Last Updated : 02 Oct 2020 03:05 PM

கரோனாவை பார்த்து பயப்படுவதை விட திமுகவைப் பார்த்துதான் முதல்வர் அஞ்சுகிறார்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை

கரோனாவைப் பார்த்துப் பயப்படுவதைவிட; மக்களுக்குத் துணையாக நிற்கும் திமுகவைப் பார்த்துத்தான் முதல்வர் பழனிசாமி அதிகமாகப் பயப்படுகிறார், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும், மக்களைத் திரட்டி திமுக தொடர்ந்து போராடும் என ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் நடைபெற்ற ‘மக்கள் சபையில்’ பங்கேற்று அந்தக் கிராம மக்களிடையே உரையாற்றினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் கிராமப் பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஒவ்வோர் ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டத்தை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட அரசு உத்தரவிட்டது.

கிராமசபைக் கூட்டம் என்பது, கிராம மக்களின் பிரச்சினைகளைக் கிராமசபை ஊராட்சி தலைவர்களிடத்தில் கோரிகைகளை, குறைகளைச் சுட்டிக் காட்டி எடுத்துச் சொல்லி அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகும். தாய்மார்கள் குறைகளை எடுத்துச் சொல்லும் போது பேருந்து நிலையம், சாலைகள், கேட், பட்டா போன்ற பிரச்சினைகளை எடுத்துச் சொன்னார்கள்.

விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்வதைப் போலக் கிராமங்கள் தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது. அதனால் தான் காந்தியடிகள் கிராமத்திற்கு முக்கியத்துவம் தந்தார்கள். கிராமங்கள் செழிப்படைய வேண்டும் - வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகக் காந்தியடிகள் தொடர்ந்து பாடுபட்டு வந்தார். அதற்காகத்தான் காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் இருக்கும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைக்கு இந்தக் கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டக்கூடாது என்று இந்த ஆட்சி தடை விதித்தது. அதனால் தான் கிராமசபைக் கூட்டம் என்றில்லாமல் மக்கள் சபைக் கூட்டம் என்ற உணர்வுடன் நாம் இங்கு கூடியிருக்கிறோம். தடைகள் வந்தாலும் மக்கள் ஒன்று திரண்டு எங்கள் குறைகளைச் சொல்வோம் என்ற தெம்புடன் வந்திருக்கிறீர்கள். அதற்காக என்னுடைய நன்றியை - வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதே பல்வேறு ஊர்களில் கிராம சபைகளில் கலந்து கொண்டுள்ளேன். தலைவர் ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவர் இந்த நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை - சாதனைகளை - பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, நெசவாளர்களுக்கு, பாட்டாளிப் பெருமக்களுக்கு, மகளிருக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு என எல்லா தரப்பு மக்களின் பிரச்சினைகளையும் தலைவர் முதல்வராக இருந்தபோது அவரது சாதனை வாயிலாகத் தீர்த்து வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஐந்தாவது முறை தலைவர் முதல்வராக இருந்தபோது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தேன். பதவியில் இருக்கும் போது மட்டுமல்ல; பதவியில் இல்லாதபோதும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டேன். கிராம சபைக் கூட்டங்களை நாங்களே கூட்டினோம்; மக்களுடைய குறைகளைக் கேட்டோம். ஆட்சி பொறுப்பில் இருந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராக கலந்துக் கொண்டேன். அதன்பிறகு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் கலந்துக் கொண்டேன்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் கிராமத்துக்கும் சென்று, நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், முன்னோடிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஊராட்சி மன்றத்தைக் கூட்டி பிரச்னைகளை, மக்கள் குறைகளைக் கேட்டு, அவர்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக் கொண்டு அந்த மனுக்களை கலெக்டரிடத்தில் கொடுத்து குறைகளை முடிந்தளவு தீர்த்து வைத்தோம்.

ஆனால் அப்போது ஆட்சியில் நாம் இல்லை. எதிர்க்கட்சியான நாம் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்பதைக் கேட்டறிந்து அதற்கு தகுந்தாற்போல தேர்தல் அறிக்கையை தயாரித்தோம். மக்கள் அதனை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டு மிகப்பெரிய வெற்றியை அளித்தார்கள்.

இந்தியாவில் 3-வது இடத்தில் இருக்கிறோம். அதற்கு காரணம் நீங்கள் தான். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு என்னநிலை என்பதை அறிந்து புரிந்து கிராமசபைக் கூட்டம் வாயிலாக அவர்களது குறைகளை அறிய வேண்டும்.

இந்த நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் விளங்குகிறார்கள். அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அப்படிப்பட்ட விவசாயிகள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள்? மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்திய போது ஒரு பைசா கூட குறைக்கப்படமாட்டாது என்று அன்று இருந்த அதிமுக அரசு சொல்லிவிட்டது.

கருணாநிதி விவசாயிகளுக்காகப் பல திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அதனால்தான் விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச மின்சாரத்தை வழங்கிய ஆட்சி, தலைவர் கருணாநிதி ஆட்சி. ரேசன் அரிசி விலை குறைப்பு, சத்துணவில் முட்டை - முக்கியமாக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருக்கும் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்கிறேன் என்று உறுதி மொழி கொடுத்தார்.

வெற்றி பெற்று அவர் முதல்வரானார். ஒரே கையெழுத்தில்; தான் பதவியேற்ற மேடையிலேயே, 7000 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுறவுக் கடனை ரத்து செய்தவர் நம்முடைய தலைவர் . ஒரு விவசாயி தன்னுடைய விளைபொருளைத் தானே விற்க வசதியாக உழவர் சந்தைகளை உருவாக்கியவர் தலைவர் . அனைத்து ஊர்களிலும் உழவர் சந்தையைக் கொண்டு வந்தவர் தலைவர். இப்படி விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் தலைவர் செய்து கொடுத்ததை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராகக் கிராம சபையைக் கூட்டி தீர்மானம் போடுங்கள்”என்று நான் அறிவிப்புச் செய்தேன். வேளாண் சட்டத்தை எதிர்க்காமல் துணை நிற்கும் ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்து வருகிறது. அதை எதிர்த்து நாம் குரல் கொடுத்து வருகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு முழுக்க நாம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்று ஊராட்சி முழுக்க கிராமசபைக் கூட்டத்தை நடத்துகிறோம்.

எங்கள் ஊர் சார்பாக வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கிராமசபைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்த நேரத்தில் அரசியல் பேசக் கூடாது, கட்சித் தீர்மானம் - கண்டனத் தீர்மானம் - அரசுக்கு எதிராகத் தீர்மானம் போடக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சொல்லி வந்தார்கள்.

நேற்றிரவு 10 மணிக்கு திடீரென்று கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தகவல் வந்தது. அதற்குக் காரணம் கரோனா என்று காரணத்தைச் சொல்கிறார்கள். கரோனாவிற்கு பயப்படுவதை விட திமுக -வைப் பார்த்துத் தான் எடப்பாடி பயந்து கொண்டிருக்கிறார். மக்களுக்காகத் தான் போராடுகிறோம். சொந்தப் பிரச்சினைகளுக்காக இல்லை.

இது கிராமசபை கிடையாது; ‘மக்கள் சபை’. உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் ஆளும் கட்சிதான் அதிகமாக வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் எவ்வளவோ அநியாயங்கள் - அக்கிரமங்கள் செய்தார்கள். அதையும் மீறி எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.

திமுகவைச் சார்ந்த தலைவர்கள் மட்டுமல்ல; இது விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் பிரச்சினை என்பதால் அதிமுகவைச் சார்ந்த தலைவர்களும் இந்த தீர்மானங்களைப் போடத் தயாராகிவிட்டார்கள். இந்தச் செய்தி முதல்வர் பழனிசாமிக்கு சென்றுவிட்டதால் இந்த கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கரோனா காலத்தில் அதிமுக செயற்குழு நடக்கிறது. அமைச்சர்கள் தினமும் பேட்டி கொடுக்கிறார்கள். முதல்வர் ஊர் ஊராக ‘டூர்’ போகிறார். ஆனால் கிராம சபை மட்டும் கூடக் கூடாது. அதாவது திமுக எதையும் செய்யக்கூடாது. இது ஒன்றுதான் உங்கள் நோக்கமா? ஊரடங்கை நீட்டிப்பதே திமுகவுக்காகத் தானா?

மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு என்ன கெடுதல்கள் - பிரச்சினைகள் - விவசாயிகள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில பேருக்குப் புரியவில்லை. அதை உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

இந்தச் சட்டங்கள் -

* விவசாயத்தில் ஆன்லைன் வர்த்தகத்தைத் திணிக்கிறது.

* பண்ணை ஒப்பந்த விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்குகிறது.

* நெல்லுக்கான குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் கிடையாது.

* அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது.

* வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள் மூடப்படும்.

* உழவர் சந்தைகள் காணாமல் போகும்.

* சில்லறை வணிகம் - வியாபாரிகள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுவார்கள்.

* பொதுவிநியோகத் திட்டத்துக்கு அச்சுறுத்தல்.

* ரேசன் கடைகள் இருக்குமா என்றே தெரியவில்லை.

* விலைவாசி கடுமையாக உயரும்.

இப்படிப்பட்ட நிலைமைகள் விவசாயிகளுக்கு வந்துவிடும்.

இதனால் நாம் மட்டுமல்ல; விவசாயிகள் - அனைத்துக் கட்சிகளும் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரயில் நிறுத்தம், பந்த், சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில விவசாயிகளும் இந்த சட்டத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இதை நீங்கள் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

நாம் மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகா போன்ற பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கூட வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் அறப்போராட்டமாக - சட்டப் போராட்டமாக நடத்த வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக போராடும் என்பதை உங்களிடம் சுட்டிக் காட்டுகிறேன்.

மக்கள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தைப் படித்து விடுகிறேன். நீங்கள் அனைவரும் ஆமோதிக்கும் வகையில் கைகளை உயர்த்திக் காட்டுங்கள். மத்திய அரசு கொண்டு வந்த மேற்கண்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்த கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

விவசாய நலனையும், வேளாண் நலனையும் மனதில் கொண்டு இன்றைக்குக் கிராமப்புறங்களின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண் துறையைக் காப்பாற்ற இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒருமனதாக இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்பவர்கள் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் உங்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x