Last Updated : 02 Oct, 2020 02:51 PM

 

Published : 02 Oct 2020 02:51 PM
Last Updated : 02 Oct 2020 02:51 PM

பணியிலிருந்த அரசு மருத்துவரைத் தாக்கியதாக ஊழியர்கள் போராட்டம்; காவல் ஆய்வாளர் உள்ளிட்ட சிலர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவரைத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பணியிலிருந்த அரசு மருத்துவரைத் தாக்கியதாக ஆய்வாளர் மற்றும் சிலர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம் (45). இவரது தந்தை பக்கிரிசாமி (80). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செப். 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று (அக்.1) மாலை உயிரிழந்தார்.

இதை அறிந்த உறவினர்கள், மருத்துவமனையில் திரண்டு, உரிய சிகிச்சை அளிக்காததால் பக்கிரிசாமி இறந்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனையும் பிடுங்கிச் சென்றுள்ளனர். இதைக் கண்டித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

பின்னர் மருத்துவ அதிகாரி அலுவலகம் முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர், செவிலியரைத் தாக்கிய நபர்கள் மீது புதிய சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடாரா நேரில் வந்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் எனக் கூறிய சுகாதாரத்துறை ஊழியர்கள் நள்ளிரவைத் தாண்டியும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இன்றும் (அக்.2) அவர்களது போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தால் அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டும் மருத்துவர்கள், ஊழியர்கள் பணியில் இருந்தனர். மற்ற பிரிவுகளில் பணிகள் பாதித்து நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் வாசுதேவன் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் சிலர் மீது பணியிலிருந்த அரசு ஊழியரைத் தாக்குதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பெரியகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும், ஊழியர்களும் கூறும்போது, ''அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை போதாது. சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட விதிகளின்படி மருத்துவர், செவிலியரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆய்வாளரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அலட்சியம் காட்டினால் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் போராட்டம் தொரும்'' என எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x