Published : 02 Oct 2020 01:17 PM
Last Updated : 02 Oct 2020 01:17 PM

வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம்; தப்பிக்கவே கிராம சபைக் கூட்டங்கள் ரத்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை

வேளாண் சட்டங்களை எதிர்த்தும், உள்ளாட்சி ஊழல் முறைகேடுகளை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்ற இருந்த நேரத்தில் கிராம சபைக்கூட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தில் கேள்விகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதால் பயமா என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

அக்டோபர் 2ல் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என செப்டம்பர் 26ம் தேதிதான் அரசு அறிவிப்பு வெளியிட்டது. கரோனா தொற்று இருப்பது அரசுக்கு தெரியும். அதிலும் கூட, அரசு விதித்துள்ள கோவிட்-19 தடுப்பு விதிகளை கடைப்பிடித்து, அரசு சுட்டிக்காட்டியுள்ள வழிமுறைகளை பின்பற்றி கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவித்துவிட்டு, ஐந்து நாட்கள் இடைவெளியில் அதை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

மத்தியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதும், அப்படி தீர்மானம் நிறைவேற்றினால் நீதிமன்றங்களில் பல்வேறு கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும். அதை தவிர்ப்பதற்காகவே மாநில அதிமுக அரசு கிராமசபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காலங்களில், ஜவஹர் வீடுகட்டும் திட்டம், நூறுநாள் வேலை திட்டம், சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு எதிராகவும் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதை அறிந்தும் கிராமசபைக்கூட்டடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கிராம சபைக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமெனவும், அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டுமென ஊராட்சித் தலைவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x