கிராமசபை கூட்டங்கள் ரத்து; ஜனநாயக விரோத செயல்: டிடிவி தினகரன் கண்டனம்

கிராமசபை கூட்டங்கள் ரத்து; ஜனநாயக விரோத செயல்: டிடிவி தினகரன் கண்டனம்
Updated on
1 min read

தமிழகத்தில் காந்தி பிறந்தநாளில் நடக்கும் கிராமசபை கூட்டங்களை இந்த ஆண்டு கரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு ரத்து செய்திருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகள் பிறந்த நாள் உள்ளிட்ட வருடத்தில் 4 நாட்கள் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடப்பது வழக்கம். இந்த கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. விவசாயிகளும் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் காந்தியடிகள் பிறந்தநாளை ஒட்டி கிராமசபைகள் கூட்டம் நடக்க இருந்தது. இதில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இவ்வாறு நிறைவேற்றப்பட்டால் அது தமிழகம் முழுவதற்குமான எதிர்ப்பாக அமையும். இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் நேற்று திடீரென கரோனா தொற்றை காரணம் காட்டி கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:

"இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் வாழ்கிறது என்று சொன்ன மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி மாநிலம் முழுவதும் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு @CMOTamilNadu திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

கிராமப்புற மக்களின் பிரச்னைகள், தேவைகளைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பாக உள்ள கிராமசபை கூட்டங்கள் கொரோனாவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயலாகும்.

ஊருக்கு ஊர் வலுக்கட்டாயமாக கூட்டம் திரட்டி, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது, கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சொல்வது ஏற்கக்கூடியதாகவா இருக்கிறது?”

இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in