Published : 02 Oct 2020 11:47 AM
Last Updated : 02 Oct 2020 11:47 AM

கிராம சபை கூட்டங்கள்  ரத்து; திட்டமிட்டப்படி மக்களை சந்திப்போம் : ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்டு நிற்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு; திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு விடுத்த அறிக்கை.

“கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்பாக 2.10.2020 அன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன” என்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவனை முதலில் அறிவிப்பு வெளிட வைத்து - பிறகு, “அரசு கொடுத்துள்ள கூட்டப் பொருள் தவிர, வேறு தீர்மானங்களை ஊராட்சித் தலைவர்கள் நிறைவேற்றக் கூடாது" என்று திருச்சி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநரை விட்டு உத்தரவு அனுப்ப வைத்து - கபட நாடகத்திற்கான ஒத்திகை பார்த்து- ஊராட்சி மன்றத் தலைவர்கள் யாரும் அஞ்சவில்லை என்பதால்; கடைசி முயற்சியாக, முதல்வரே தலையிட்டு, இப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நாளையதினம் நடைபெற விருந்த கிராமசபைக் கூட்டங்களை அடிப்படையின்றி ரத்து செய்திருப்பதற்கு, அதிமுக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“கரோனா பாதிப்பே இல்லை”, “நோயைக் கட்டுப்படுத்தி விட்டோம்”, “என்னுடைய மாவட்ட ஆய்வுகளால் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்றெல்லாம் தனக்குத்தானே தற்புகழ்ச்சியான வெற்றுப் பாராட்டுரையை ஒருபுறம் முதலமைச்சர் திரு. பழனிசாமி இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருக்க; இன்னொரு பக்கம் மாவட்ட ஆட்சித் தலைவரே “ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல்” என்ற காரணத்தைக் காட்டி, உள்ளாட்சி ஜனநாயகத்தின் ஆணிவேராகக் கருதப்படும் கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ய வைத்து - வெட்கக்கேடான இரட்டை வேடத்தைப் போட்டது அதிமுக அரசு.

ஏதோ ‘துக்ளக்’ தர்பார் போல் இன்று காலை முதல், இந்த “கிராம சபை” கூட்ட விவகாரம் அரசு நிலையில் காட்சியளித்தது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்- அதிலும் குறிப்பாக முதல்வர் பழனிசாமியின் இந்த நான்காண்டு காலத்தில் - மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலரும்- ஏன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் அதிமுகவின் “மாவட்டச் செயலாளர்கள்” போல் செயல்படுகிறார்கள்.

அதிலும்- நேற்றைய தினம் தமிழக அரசு வெளியிட்டுள்ள “கரோனா செய்திக்குறிப்பில்” , ஈரோடு மாவட்டம் நோய் பாதிப்பில் 26 - ஆவது இடத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அறிவித்துவிட்டு, இன்று கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்வதற்காக- “நோய்ப் பரவல்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் காலையில் ‘அம்புலிமாமா கதை’ விட்டார். இப்போது முதல்வரே அந்த கழுத்தறுப்புக் கதைக்கு வெட்கத்தை உதறிவிட்டு எழுத்தாளர் ஆகியிருக்கிறார்.

மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும்- அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும், நாட்டில் எழுந்துள்ள எதிர்வினை அலைகளை ஒட்டி, நான் நேற்றைய தினம் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மத்தியிலேயே , அமோக ஆதரவு திரண்டு வருவதைத் தெரிந்து கொண்டுள்ள அதிமுக அரசு, “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்றுதான் இந்த “மிரட்டல்” முயற்சிகளில் எல்லாம் இறங்கியது.

ஆனால் திமுகவின் கோரிக்கையை ஏற்று, எங்கே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களும் - கட்சி சார்பற்ற முறையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று பழனிசாமிக்கு கிடைத்த கடைசித் தகவல் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆகவேதான் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் பழனிசாமியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார். என்ன செய்வது!? – உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் இருந்து எங்கே விழுந்து விடுவோமோ என்ற சோகத்தில் இருக்கும் முதல்வர் “கரோனா”விலும் பெரிதும் குழம்பிப் போய் நிற்கிறார் பாவம்.

ஏற்கனவே கரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டங்களில்- “மே தினம்” மற்றும் “சுதந்திர தினம்” ஆகிய தேதிகளில் நடத்த வேண்டிய கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை. இப்போது அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ல் நடக்க வேண்டிய கூட்டத்தையும் ரத்து செய்திருப்பது, ஒரு ஜனநாயகப் பச்சைப் படுகொலை; பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கங்களை அடியோடு சிதைக்கும் அராஜகம்; ‘இந்திய நாட்டின் உயிர் மையம் கிராமங்களில்தான் உள்ளது’ என்றுரைத்த உலக உத்தமர் காந்தி அடிகளுக்குச் செய்யும் கடைந்தெடுத்த துரோகம்.

அதிமுக அமைச்சர்களின் நிகழ்ச்சிகள்- அதிமுகவினர் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளை “தாராளமாக” அனுமதித்து விட்டு; அரசு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஊராட்சி உதவி இயக்குநர் எல்லாம் பங்கேற்றுவிட்டு; முதல்வரே மாவட்டம் மாவட்டமாக சென்று “ஆய்வுக்கூட்டம்” என்ற பெயரில் “முதல்வர் வேட்பாளருக்காக” நாணமின்றி ஆதரவு திரட்டி - உள்கட்சிப் பிரச்சினையில், மீள முடியாமல் ஆழமாகச் சிக்கியுள்ள முதல்வர் பழனிசாமி, இப்படி உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயகக் குரலை நெரிக்க “கரோனா” என்று அலறுவது ஏன்? அதிமுக. என்றால் கரோனாவே இல்லை; திமுக ஒரு ஜனநாயகாக் கடமையாற்ற வந்தால் கரோனா வந்து விடுகிறதா?


முதல்வருக்கு நேர்மையும் நெஞ்சுரமும் இருந்தால், அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களை விட்டு வேளாண் சட்டங்களை ஆதரித்து தீர்மானம் போடுங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்க வேண்டியதுதானே! அது அவரால் முடியாது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற பேராசையான நிலைமை. “ நம் பதவியைக் காப்பாற்ற விவசாயிகள் விரோதச் சட்டங்களை ஆதரித்து விட்டோம். ஆனால் மக்களிடம் வாக்கு பெற்று - வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள்- குறிப்பாக அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே, தமது மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்கள்” என்பது பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும்.

அதனால்தான் வேறு வழியில்லாமல்- தன் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கூட செல்வாக்கை இழந்திருக்கும் முதல்வர் - இப்போது “கிராமசபைக் கூட்டங்களே நாளைக்கு வேண்டாம்” என்று அறிவிக்க வைத்திருக்கிறார். கிராம ராஜ்யம் காணப் பாடுபட்ட அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில், இப்படியொரு ஜனநாயக விரோதத் தாக்குதலை நடத்தியிருக்கும் முதலமைச்சரை விவசாயிகள் மன்னிக்கவும் மாட்டார்கள்; காந்தி அடிகளின் நினைவுக்குச் செய்யப்படும் துரோகத்தை மறக்கவும் மாட்டார்கள்.

ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக - திமுக அறிவித்த பணியை, நிச்சயம் செய்து முடிக்கும். ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி - கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் - கழக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும், கிராம மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவர்களிடம் அதிமுக அரசின் அருவருக்கத் தக்க முகத்தை - வேளாண் சட்டங்களை ஆதரித்து மத்திய பாஜக அரசுக்கு அஞ்சி - விவசாயிகளை அடிமையாக்கியுள்ள “ வஞ்சக நாடகத்தை”, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் சிறப்பான கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரையும் மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x