Published : 02 Oct 2020 11:06 AM
Last Updated : 02 Oct 2020 11:06 AM

அரசு விடுமுறை நாளிலும் பணிக்கு வர அழைப்பு: சேலம் மாநகராட்சி ஊழியர்கள் அதிருப்தி

சேலம்

சேலம் மாநகராட்சி அலுவலர்களை இன்று (காந்தி ஜெயந்தி) அரசு விடுமுறை நாளிலும் பணிக்கு வர அதிகாரிகள் நிர்பந்திப்பதால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி என நான்கு மண்டல அலுவலகங்களில் சுகாதாரத்துறை, பொறியியல் பிரிவு, நகர அமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சியில் வரிவசூல் பணி, குடிநீர் பராமரிப்பு, சுகாதார பணிகளில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். காந்தி ஜெயந்தியான இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தவிர்த்து அலுவல் பணியில் இருக்கும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை விடப்படும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வரி வசூல் பணியை துரிதப்படுத்தும் விதமாக காந்தி ஜெயந்தியில் அரசு விடுமுறை நாளான இன்று வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள், ஃபிட்டர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வர உதவி ஆணையர்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

இதை பார்த்த அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கரோனா தொற்று காலத்தில் வரி வசூல் செய்யும் அலுவலர்களிடம் பொதுமக்கள் முகம்சுழிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, அரசு விடுமுறை நாளில் அலுவலர்களை பணிக்கு வரவழைப்பதை உயர் அதிகாரிகள் கைவிட வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக உதவி ஆணையர் ரமேஷ்பாபு கூறும் போது, ‘‘கரோனா தொற்று தடுப்பு பணி மற்றும் நிலுவை வரி வசூலிப்பு பணிகளுக்காக அலுவலர்கள் இன்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் கரோனா தொற்று மருத்துவப் பரிசோதனை நடந்து வரும் நிலையில், அலுவலர்கள் பணிக்கு வர வேண்டியது அவசியமாகியுள்ளது. அரசு விடுமுறை நாளில் அவர்களுக்கு வருகை பதிவு அளிக்க முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x