Published : 02 Oct 2020 07:19 AM
Last Updated : 02 Oct 2020 07:19 AM

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் காலமானார்: முதல்வர், தலைவர்கள் இரங்கல்

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

இந்தியன் வங்கியின் இயக்குநர், செயல் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் எம்.கோபாலகிருஷ்ணன். இந்தியன் வங்கியின் தலைவராக இருந்து ஓய்வுபெற்றார். இவர் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது தந்தை எம்.ராதாகிருஷ்ணன் பிள்ளை, சென்னை மாநகராட்சி மேயராக 1945-46 காலகட்டத்தில் பதவி வகித்தவர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கோபாலகிருஷ்ணன், சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (30-ம் தேதி) இரவு காலமானார். மயிலாப்பூரில் உள்ள வீட்டில் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, நேற்று மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, பெசன்ட்நகர் மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த கோபாலகிருஷ்ணனுக்கு ராஜலட்சுமி என்ற மனைவி, சகிலா என்ற மகள் உள்ளனர்.

கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி: இந்தியன்வங்கி முன்னாள் தலைவரும், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: எம்.கோபாலகிருஷ்ணன்காலமான செய்தி அறிந்து வேதனையுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஏழை, எளியவர்களும் எளிதில் வங்கிக் கடன் பெற முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். மாநிலத்தில் புதிய தொழில் முன்னேற்றங்களுக்கு உதவும் வகையில் தனதுவங்கிப் பொறுப்பை பயன்படுத்தியவர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மது ஒழிப்பு, சமூகநீதிக்காக பாமகமேற்கொண்ட பல்வேறு பணிகளுக்கு ஆதரவாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x