Published : 02 Oct 2020 07:11 AM
Last Updated : 02 Oct 2020 07:11 AM

ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற கதர் ஆடை வாங்கி பயன்படுத்துவோம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை

காந்தியடிகள் பிறந்த இந்த நன்னாளில், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘கதர் பயன்படுத்துவதால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர் தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி கிடைக்கிறது’ என்ற காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள நூற்போர், நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்துக்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் தமிழகம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. கதர் ஆடை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

கதர் நூற்போர், நெசவாளர் நலவாரியம் மூலம், கதர் வாரியம்மற்றும் சர்வோதய சங்கங்களில் பணியாற்றும் நூற்பாளர், நெசவாளர்களின் குடும்பத்துக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து, இயற்கை மரணம் ஆகியவற்றுக்கு உதவித் தொகை, மூக்கு கண்ணாடி வாங்க நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

எளிமை, தேசப்பற்றை வெளிப்படுத்துவதுடன் இந்திய கலாச்சாரத்தையும் கதர் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, ஏழை எளிய நூற்போர், நெசவாளர்கள் வாழ்வு சிறக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x