

தமிழகத்துக்கான ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரத்து321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வணிகவரித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஐஜிஎஸ்டி) தொடர்பாக கடந்த செப்.22-ம் தேதி நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு 2017-18-ம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஐஜிஎஸ்டி நிலுவை ரூ.4 ஆயிரத்து 321 கோடி என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.
அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி மன்றத்துக்கு பரிந்துரை செய்வதற்கு முன், மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டியதொகையை மீண்டும் ஒருமுறைசரிபார்க்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று (அக்.1) நடைபெற்ற கூட்டத்தில், தற்போது நிலுவையில்உள்ள தொகை கணக்கீடுகள்அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை மத்தியஅரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
மேலும் அமைச்சர்கள் குழு, மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இறுதி தொகையை ஆராய்ந்து, அக்.5-ம் தேதி நடைபெற உள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் பரிசீலிக்க, பரிந்துரைத்துள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்ட பரிந்துரைகள்படி தமிழகத்துக்கான நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹார் துணை முதல்வர் தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் வணிகவரித் துறை செயலர் பீலாராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.