

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 93-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 93-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் உள்ளசிவாஜிகணேசன் மணிமண்டபத்தில் அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவாஜிகணேசன் குடும்பத்தினர் ராம்குமார், விக்ரம் பிரபு, ஆர்.ஜி.துஷ்யந்த் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில்அக்கட்சியின் கலைப் பிரிவு தலைவர் சந்திரசேகரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் உள்ளிட்டோரும் மணி மண்டபத்தில் சிவாஜிகணேசன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், சிவாஜிகணேசன் ரசிகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் சிவாஜிகணேசனின் படத்துக்கு முக்கிய நி்ர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் எம்பி.யுமான சு.திருநாவுக்கரசர், சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சிவாஜிகணேசன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அரும்பாக்கம் கே.வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.