மனநலம் பாதிக்கப்பட்ட பெங்களூரு சிறுமி கோவையில் மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெங்களூரு சிறுமி கோவையில் மீட்பு
Updated on
1 min read

பெங்களூருவைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கோவையில் மீட்கப்பட்டு அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கோவை மாநகரில் சுற்றித்திரிந்த 15 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, போலீஸாரால் அண்மையில் மீட்கப்பட்டு மணியகாரம்பாளையத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், அந்த சிறுமியை அங்கு பராமரிக்க முடியாததால், கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் இரவு தங்கும் விடுதியில் கொண்டு வந்து விடப்பட்டார்.

தொடர்ந்து, சிறுமியின் வயது குறைவு என்பதால் மாநகராட்சி இரவு தங்கும் விடுதி நிர்வாகிகள், தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால் அங்கு அந்த சிறுமிக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை, தொடர்ந்து பராமரிக்க இயலாத சூழ்நிலை குறித்து மாற்றுத்திறனாளி மறுவாழ்வு அலுவலர் சந்திரசேகர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளை உதவியுடன் அந்த சிறுமி கோவை குமுதம் நகரில் உள்ள ஆஸ்ராயா மனநிலை காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் அந்த சிறுமியிடம் பேசினர். இதில், அவரது பெயர் நஷீமா என்பது தெரிய வந்தது. பெற்றோர் குறித்த சில தகவல்களை அவரிடம் பெற்று தேடும் முயற்சியில் இறங்கினர்.

இதில், பெங்களூரில் உள்ள தன்னேரி சாலையில் சிறுமியின் தாயார் ஆயிஷாபேகம் மற்றும் அவரது சகோதரர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை அழைத்து வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், சிறுமியை அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

"கடந்த 10 நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த நஷீமாவை திடீரென காணவில்லை. அவரை பல இடங்களில் தேடினோம். இந்நிலையில், கோவையில் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என அவரது தாயார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in