

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ''இந்து முன்னணி நிறுவனத் தலைவர் வீரத்துறவி ராம கோபாலன் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் பல.
அவரது இழப்பால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இன்ப அமைதி பெறப் பிரார்த்திக்கின்றோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் இரங்கல்
இதேபோல மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் ஆற்றிய சமயத் தொண்டை எவராலும் மறக்க இயலாது. 1981-ம் ஆண்டு தென்காசி மீனாட்சிபுரம் மத மாற்றப் பிரச்சினை, 1982-ம் ஆண்டு குமரி மாவட்டம் மண்டைக்காடு பிரச்சினை போன்ற முக்கிய நிகழ்வுகளில் ராம கோபாலனின் பணிகள் குறிப்பிடத்தகுந்தவை.
94-ம் வயதில் பரிபூரணமான அவர் ஆன்மா சாந்தி பெற்று, இறைவன் சன்னிதானத்தில் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்''.
இவ்வாறு மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.