

திருப்பத்தூர் மாவட்டம், அச்சமங்கலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையில், வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்கள் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆசாரிவட்டம் என்ற பகுதியில் விவசாயி சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பழங்காலத்தில் கற்களால் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து முனைவர் ஆ.பிரபு கூறுகையில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தடயங்கள் கள ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள அச்சமங்கலம் கிராமத்தில் கள ஆய்வு நடத்தினோம்.
அதில், சின்னசாமி என்பவரின் விவசாய நிலத்தில் சிதைந்த நிலையில், கல்வட்டங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
இதைத் தொடர்ந்து அங்கு ஆய்வு செய்யத் தொடங்கினோம். விவசாய நிலத்தில் புதர்மண்டிய இடத்தில் புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கூர்மையான வேட்டைக்கருவியைக் கண்டெடுத்தோம். இக்கருவியானது 11 செ.மீ. நீளமும், 2 செ.மீ. அகலமும் கொண்டதாக இருந்தது.
அந்தக் கருவியின் முனையில் கூர்மையாகச் செதுக்கப்பட்ட அதன் அடிப்பாகம் கைப்பிடிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை புதிய கற்கால மக்கள் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. மனிதர்கள் கைகளில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் கைத்தடி வைத்துக்கட்டி ஈட்டி போல இக்கருவிகளைப் பயன்படுத்தும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கருவி கிடைத்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சிறு, சிறு கற்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு சென்று கள ஆய்வு நடத்தினோம். அதில், அரவைக் கல் (Grinding Stone) ஒன்றும் கண்டறிந்தோம். இந்த அரவைக் கல்லானது 16 செ.மீ. நீளமும், 12 செ.மீ. அகலமும் கொண்ட கோள வடிவத்தில் உள்ளது.
இதன் மேற்புறமும், அடிப்புறமும் பள்ளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்லினைத் தேய்த்து மெருகூட்டி அகழாக வடிவமைத்துள்ளனர். இதனை மூலிகை அரைக்கவோ அல்லது சந்தனம் அரைக்கவோ அந்தக் கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தக் கருவிகள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
இந்த இடத்தைச் சுற்றிலும் பல கல்வட்டங்கள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயப் பணிகளுக்காக அவற்றை அப்புறப்படுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிடைத்து வரும் வரலாற்றுச் சான்றுகள் இந்த மாவட்டத்தின் வரலாற்றினை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இதுபோன்ற அடையாளங்களை மாவட்டத் தொல்லியல் துறையினர் ஆய்வுப்படுத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது" என்றார்.