

திடீர் தொடர் மழையால் புதுச்சேரியில் 150 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த கிராமப் பகுதிகளான கொடாத்தூர், மணவெளி, சுத்துகேணி, சந்தைப்புதுக்குப்பம் பகுதிகளில் சம்பா பருவத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சம்பா நடவு செய்துள்ளனர். இந்நிலையில், மூன்று நாட்களாகத் தொடர்ந்து இரவில் பெய்துவரும் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இப்பகுதி விவசாயிகள் ஜெய்சங்கர், ராஜாராமன் ஆகியோர் கூறுகையில், "தற்போது சம்பா போகம் என்பதால் புதுச்சேரியில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல் நடவு நட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக மழைப்பொழிவு உள்ளது. குறிப்பாக, நேற்று (செப். 30) நள்ளிரவில் 3 மணிநேரம் கனமழை பெய்தது. இதில், கொடாத்தூர், மணவெளி போன்ற கிராமங்களில் 25 நாட்களுக்கு முன் 150 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் முழுமையாக மழை நீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வசதி சரியாக இல்லாததால் நெற்பயிர்கள் அழுகி ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
இதைத் தொடர்ந்து, காட்டேரிக்குப்பம் வேளாண் அலுவலர் வெங்கடாச்சலத்திடம் விவசாயிகள் பயிர்கள் சேதம் குறித்து முறையிட்டனர். அவர் விவசாய நிலங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அவருடன் கிராம விரிவாக்க அலுவலர் ஆதிநாராயணனும் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில், "வேளாண் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்தனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசிடம் கோரி வாங்கித் தருவதாக உறுதி தந்தனர். இனி மழைக்காலம் தொடரும் என்பதால் வடிகால் வாய்க்கால்களைச் சுத்தம் செய்து தர அரசுக்கும் கோரியுள்ளோம்" என்று தெரிவித்தனர்.