Published : 01 Oct 2020 06:20 PM
Last Updated : 01 Oct 2020 06:20 PM

தொழிலாளர் குழந்தைகளின் மருத்துவக் கனவைப் பறிக்கும் இஎஸ்ஐ அறிவிப்பு: கோவை எம்.பி. கண்டனம்

இஎஸ்ஐ எனப்படும் தொழிலாளர் நல ஈட்டுறுதி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தொழிலாளர் குழந்தைகளின் மருத்துவக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 சதவீத இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது எனக் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் பெயர் பெற்ற தொழில் நகரமான கோவை, சிங்காநல்லூரில் 32 ஏக்கர் நிலத்தில் ரூ.520 கோடி மதிப்புள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனைகள் 1948 தொழிலாளர் காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் பணத்தை வைத்தே இம்மருத்துவமனை மற்றும் கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில், தொழிலாளர்களின் குழந்தைகள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக காப்பீட்டு நபர் (IP quota) அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி, மொத்தமுள்ள 100 மருத்துவ இடங்களில் 65 இடங்கள் மாநில அரசு மூலமும், 15 இடங்கள் மத்திய அரசு மூலமும் நிரப்பப்படும். மீதமுள்ள 20 இடங்கள் இஎஸ்ஐ மருத்துவமனையின் மூலமாக காப்பீட்டு நபர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், ‘இஎஸ்ஐ மூலமாக நிரப்பப்பட்டு வந்த காப்பீட்டு நபர் இடஒதுக்கீட்டை மத்திய அரசு இந்த ஆண்டு (2020-2021) முதல் பறித்துள்ளது!’ என்று கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

''தொழிலாளர் நல ஈட்டுறுதி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் காப்பீட்டு நபர்களுக்கான இடங்கள் இனி, மத்தியப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகம் மூலமாக நிரப்பப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 35 இஎஸ்ஐ மருத்துவமனைகளின் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் பெற்று, இஎஸ்ஐ மருத்துவமனைக்குத் தங்களால் ஆன பங்களிப்பைக் கொடுத்த தொழிலாளர்களின் குழந்தைகள் மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ இடங்கள் மத்தியப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகம் மூலமாக நிரப்பப்படும் என்ற ஒற்றை அறிவிப்பின் மூலம், ஏழை மாணவர்களின் கனவை மத்திய அரசு சிதைத்துள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

நீட் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மத்திய அரசு தொடர்ந்து, ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளின் மருத்துவக் கனவைச் சீர்குலைக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையையும் பார்க்க வேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். பழைய நடைமுறையை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களைக் கொண்டே நிரப்ப மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இதேபோல ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பறிக்கும் இந்நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் தொழிற்சங்கங்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தலையீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x