

தேசிய தன்னார்வ ரத்த தான நாளில் இன்று மதுரை அரசு மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த ரத்ததானம் முகாமை தொடங்கி வைக்க வந்த ஆட்சியர் டி.ஜி.வினய், திடீரென்று அவரும் தன்னார்வலர்களுடன் சேர்த்து ரத்ததானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் ரத்ததானம் செய்த தன்னார்வலர்கள் கவுரவிக்கப்படுவதோடு, ரத்ததானம் முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இந்த தினத்தை முன்னிட்டு ஏராளமான ரத்தக்கொடையாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
மருத்துவமனை ரத்தவங்கி துறை, அரசு மருத்துவமனை மற்றும் பை-பாஸ் ரோடு ஆகிய இரண்டு இடங்களில் ரத்ததானம் முகாம்களுக்கு ஏற்பாடு யெ்திருந்தது.
அரசு மருத்துவமனையில் நடந்த ரத்ததானம் முகாமை ஆட்சியர் டிஜி.வினய் தொடங்கி வைத்தார். விழாவை தொடங்கி வைத்த அவர் திடீரென்று தன்னார்வர்களுடன் சேர்த்து அவரும் ரத்ததானம் செய்தார்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தோடு விழிப்புணர்வு செய்ததோடு சென்றுவிடாமல் ஆட்சியரே முன் உதாரணமாக ரத்ததானம் செய்ததால் அங்கு நின்ற பலர் ஆர்வமாக வந்து ரத்ததானம் செய்தனர்.
மருத்துவத்துவரான ஆட்சியர் டி.ஜி.வினய், மாணவர் பருவத்தில் இருந்தே ஒரு ரத்தகொடையாளராம். தான் பணிபுரிந்த இடங்களில் அவ்வப்போது தொடர்ச்சியாக அவர் ரத்ததானம் செய்து வந்துள்ளார்.
ரத்ததானம் செய்து முடித்தப்பிறகு ஆட்சியர் டிஜி.வினய், மதுரை அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் டீன் சங்குமணி, ரத்த வங்கித்துறை தலைவர் டாக்டர் சிந்தா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.