Published : 01 Oct 2020 04:44 PM
Last Updated : 01 Oct 2020 04:44 PM

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை: அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் அமைச்சர் கே.சி.வீரமணி.

வேலூர்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 962 மகளிர் குழுக்களுக்கு ரூ.54 கோடியே 24 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1,006 அங்கன்வாடி மையங்களுக்கு 4 பாய்கள் மற்றும் 5 பழச் செடிகள் வழங்கும் நிகழ்ச்சி, தாட்கோ மூலம் 17 பேருக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக். 1) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று கடனுதவிகளை வழங்கினர். ஊரடங்கு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வங்கிகளுக்கான விருதினையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பேசும்போது, "கரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் குழுவினரின் பங்கு மகத்தானது. முகக்கவசம், கிருமிநாசினிகள் தயாரித்து வழங்குவது எனத் தங்களுடைய பொருளாதாரத்தை மட்டும் வளர்க்காமல் பொதுமக்களுக்கும் சேவை ஆற்றி உள்ளீர்கள். பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடைய பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என்பதால் எந்த வயதிலும் தொழிற்கல்வியைக் கற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, "பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குக் கடன் தேவை என்பதை அறிந்து முதன்முதலாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கினோம். தொடர்ந்து, மகளிர் மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் கல்வி கற்றால் குடும்பமே வளமாகும். பெண்கள் தங்கள் வீடுகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து அதில் காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

தேசிய அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக நூற்றுக்கு 18 குழந்தைகள் உயிரிழப்பு என்ற நிலையில் தமிழகத்தில் நூற்றுக்கு 9 பேர் என்ற அளவில் இருக்கிறது. இதற்கு தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளும் பொதுமக்களின் ஒத்துழைப்புமே காரணம். சமுதாயத்தில் சம அந்தஸ்து படைத்தவர்களாக உருவாக்க எல்லாவிதத்திலும் பல திட்டங்களை தமிழக அரசு மகளிருக்காகச் செயல்படுத்தி வருகிறது" என்றார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, "திமுகவினர் இந்த அரசை வேண்டும் என்றே குறைகூறிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை" என்று தெரிவித்தார்.

அப்போது, அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x