

2019 - 2020 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
2019 - 2020 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளில் பாதிக்கப்பட்டோருக்கு, தற்போது இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்படாமல் ஒரு சில வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார்குடி பகுதியில் விடுபட்டுள்ள 24 வருவாய் கிராமங்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.வீரமணி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அனைவரும் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து கிராமங்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும், ஆணைக்கொம்பன் நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெற்ற கிராமங்களில் விவசாயிகளின் பயிர்க் கடன்களில் பிடித்தம் செய்யாமல் இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.