Published : 01 Oct 2020 01:43 PM
Last Updated : 01 Oct 2020 01:43 PM

செப்டம்பர் மாதத்தில் 3.6 லட்சம் பேர் பயணித்துள்ளனர்; ‘க்யூஆர் கோடு’ பயண அட்டைக்கு 20% தள்ளுபடி: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு 

சென்னை

ஊரடங்கு தளர்வுக்குப் பின் செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் 3.6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு பழையபடி முழுமையாக மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீள வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த செப்.7-ம் தேதி முதல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பரங்கிமலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை செப்.9 முதல் தொடங்கியது.

செப்டம்பர் 7 முதல் நேற்று வரை மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 193 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் 30 அன்று (நேற்று) மட்டும் 22,605 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட கியூ ஆர் குறியீடு (QR Code) கோடு பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 13 ஆயிரத்து 44 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

பயணச் சீட்டு முறையை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 70,009 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் கூடுதலாக கியூ ஆர் கோடு (QR Code) பயனாளிகள் பயண அட்டைகளில் ஒருவழிப் பயண அட்டை, இருவழிப் பயண அட்டை, பலவழிப் பயண அட்டை ஆகியவற்றில் செப்டம்பர் 11 முதல் 20% தள்ளுபடி அளித்து வருகிறது.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளவாறு மெட்ரோ ரயில் பயண அட்டைகளைப் (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 10% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் வசதிக்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து வழிகளும் பொதுப் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் நிலையங்களின் நுழைவாயிலை இணைக்கும் சுரங்கப்பாதை போன்ற அனைத்து வசதிகளும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் தரப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும், அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் அனைத்து விதிகளையும் பயணிகள் பின்பற்றி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x