Published : 12 Sep 2015 05:56 PM
Last Updated : 12 Sep 2015 05:56 PM

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் தமிழக தொழில் வளர்ச்சியில் அமைதி புரட்சி ஏற்பட்டது: கருணாநிதி பெருமிதம்

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவ அறிக்கையில், ''கடந்த ஓராண்டில் பிரதமர் நரேந்திர மோடி 26 நாடுகளுக்கு பயணம் செய்தார். அதன் மூலம் ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் கோடி நேரடி முதலீடுகள் வந்துள்ளதாக மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தமிழக அரசு 2 நாள்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு ஒரே மாதத்தில் அனுமதி கிடைத்து விடும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தனஞ்செயன், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் ஆவணங்களைக் கொடுத்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை’’ என அமைச்சருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவது குறித்து ஆராய்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியில் நாங்குநேரியில் மிகப்பெரிய சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பின்னர் வந்த ஆட்சியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்கு உதவ ‘சிறப்பு தொழில் முனைப்புக் குழு’ அமைக்கப்பட்டது. 2009-10-ம் ஆண்டில் தொழில் துறை மானியக் கோரிக்கை தயாரிப்பதற்கு முன்பாக குறு,சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுடன் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.

வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு நிலங்கள், சாலைகள், மின்சாரம் வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ கடந்த 2010 ஜூலை 8 இதழில் பாராட்டியது.

2006-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 லட்சம் முதலீடுகள் அதிகரித்து 2010 டிசம்பரில் ரூ. 7 லட்சத்து 65 ஆயிரத்து 557 கோடியே 92 லட்சம் என நான்கு மடங்கு முதலீடுகள் அதிகரித்தது. இதன் மூலம் தமிழக தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது'' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x