

திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு பப்பாளி மரங்கள் அதிக விளைச்சலைத் தந்தபோதிலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வெள்ளோடு, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் பரவலாக பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. அதிகளவில் ரெட்லேடி வகை பப்பாளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
பப்பாளி கன்று நடவு செய்த எட்டு மாதங்களில் பலனளிக்கத் தொடங்குகிறது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பலன் தருகிறது. இந்த ஆண்டு சீராக மழைபெய்ததால்
பப்பாளி காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் சாகுபடி செய்யப்பட்ட நிலத்திற்கே வந்து பப்பாளிகளை கொள்முதல் செய்து வருவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் போதிய வியாபாரிகள் பப்பாளி காயை கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் விளைச்சல் அதிகளவில் இருந்தும் வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையில் வருவதால் வியாபாரிகளிடையே போட்டியின்றி காணப்பட்டு விலை குறைவாகவே வாங்கிச்செல்கின்றனர்.
நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ பப்பாளி ரூ.22 முதல் 28 வரை வழக்கமாக இந்த சீசனில் விற்பனையாகும். இதன்மூலம் விவசாயிகளுக்கு செலவுபோக கணிசமான வருவாய் கிடைக்கும்.
ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.7 க்கு விலை போகிறது. வேறுவழியின்றி குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்துவருகின்றனர்.
இந்த விலை, பப்பாளி கன்று நடவு செய்து, அதை எட்டு மாதங்கள் பராமரித்து, களையெடுக்க ஆட்களுக்கு கூலிகொடுத்து என செலவிற்கே வரவில்லை என்கின்றனர் விவசாயிகள்.