Published : 01 Oct 2020 12:42 PM
Last Updated : 01 Oct 2020 12:42 PM

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் இன்று முதல் அமல்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, 3 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பொது விநியோகத் திட்டம் 330 கோடி ரூபாய் செலவில் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் புழக்கத்திலிருந்த குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் முதல்வர் பழனிசாமியால் கடந்த ஏப்ரல் 1 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், (Integrated Management of Public Distribution System) குடும்ப அட்டைதாரர்கள் சொந்த மாநிலத்திலிருந்து இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களைத் தேசிய அளவில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கூறிய திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக தற்போது நியாயவிலைக் கடைகளில் பயன்பாட்டிலுள்ள விற்பனை இயந்திரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேசிய அளவில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சொந்த மாநிலத்தைவிட்டு இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களைத் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்துள்ள குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை தமிழ்நாட்டில் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 1.10.2020 முதல் செயல்படுத்தப்படும். மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 16.10.2020 முதல் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH and PHH-AAY) தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி தங்களுக்குண்டான உணவுப் பொருட்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் (Bio-metric authentication) மூலம் இடம்பெயரும் மாநிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயரும் குடும்ப அட்டைதாரர்கள், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டையினைக் கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவுப் பொருட்களை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விநியோக விலையில் (Central Issue Price) தங்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் (Bio-metric authentication) மூலம் பெறலாம். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்தவித இடையூறுமின்றி உணவு தானியங்களைப் பெற்றுப் பயனடையலாம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தொழில்நுட்பக் காரணங்களினால் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதலை மேற்கொள்ள இயலாத நிலையில், தற்போதுள்ள மின்னணு குடும்ப அட்டை மற்றும் ஆதார் தொடர்புடைய கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் (OTP), ஆதார் கார்டு மற்றும் தற்போதுள்ள நடைமுறையான குடும்ப அட்டை ஸ்கேனிங் முறையைப் பின்பற்றியும் அத்தியாவசியப் பொருள்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேரில் வர இயலாத பயனாளிகள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், தலைமைச் செயலாளர் சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x