Published : 01 Oct 2020 12:08 PM
Last Updated : 01 Oct 2020 12:08 PM

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மார்பகப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்: புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.குகன் உறுதி

கோவை

இந்தியாவில் பெரிய நகரங்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி.குகன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக (பிங்க் மாதம்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, வளரும் நாடுகளிலும் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பெண்களில் 52 பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது. கடந்த 10, 15 ஆண்டுகளில் சீரான முறையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வாழ்க்கை முறை மாற்றம், சிறிய வயதில் பூப்படைதல், மாதவிடாய்ப் பருவம் தள்ளிப்போதல், குழந்தைப் பேறின்மை, பரம்பரையாக பரவுதல், மரபணுக்களில் மாற்றம், தாமதமான திருமணம், தாமதமான கருத்தரிப்பு, அதிக உடல் எடை, கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல், சுற்றுச்சூழல் பாதிப்புகள், நகரமயம் அதிகரிப்பு, ரசாயனத் தன்மை மிகுந்த புகை, மதுப்பழக்கம் உள்ளிட்டவையே மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்களாகும்.

குறிப்பாக, இளம் பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்நோய் குறித்து பெண்களிடையே அதிகம் விழிப்புணர்வு தேவை.

பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரை அணுகுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவதால், 80 சதவீதம் பேர் குணமடைகின்றனர். ஆனால், இந்தியாவில் முற்றிய நிலையில் கண்டறிவதால், 50, 60 சதவீதம் பேரையே முழுமையாக குணப்படுத்த முடிகிறது. எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். எனவேதான், பொதுமக்களிடம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 30 வயதுக்கு மேல் மருத்துவர் மூலமாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேல் நானோகிராம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மார்பில் ஏதாவது கட்டி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும்.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மார்பகப் புற்றுநோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். மேலும், `தீபம்' திட்டம் மூலம் இதுவரை லட்சக்கணக்கானோருக்கு இலவசமாக மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் பி.குகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x