Last Updated : 12 Sep, 2015 12:34 PM

 

Published : 12 Sep 2015 12:34 PM
Last Updated : 12 Sep 2015 12:34 PM

கருவேல மரங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? - 13 மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி வாதிடும்போது கூறியது:

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்கள் பேராபத்தை ஏற்படுத்தி வருகின்றன. பிற தாவரங்களை வளரவிடாமல் தடுக்கிறது. ஆக்சிஜனை உறிஞ்சி கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது. கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20 மாதங்கள் கடந்துவிட்டன. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது.

வேரோடு அகற்ற வேண்டும்

கருவேல மரங்களை அகற்று வது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அனுப்பினேன். விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பதில் அனுப்பியுள்ளனர். சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றவும், இனிமேல் வளர விடாமல் தடுக்க வும் விஞ்ஞானப்பூர்வ ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, மாநிலம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக அரசு செயலர்கள் மட்டத்தில் அண்மையில் ஆலோச னைக் கூட்டம் நடத்தியுள்ளனர் என்றார்.

இதற்கு வைகோ ஆட்சேபம் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 20 மாதங்களுக்குப் பிறகு இப்போது ஆலோசனை நடத்தி, கருவேல மரங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் எந்த பலனும் ஏற்படாது என்றார்.

அப்போது நீதிபதிகள், கருவேல மரங்கள் பிரச்சினை நாடு முழுவதும் உள்ளது. இது ஒரு சமூகப் பிரச்சினை. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மதுரை உட்பட பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. கருவேல மரங்களை அகற்றுவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கருவேல மரங்களை அடியோடு அகற்றுவது எப்படி? கருவேல மரங்கள் வளர விடாமல் தடுக்கும் முறை ஆகியவை குறித்து வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றனர்.

பின்னர், கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க, 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கேரளத்திடம் பாடம் கற்க வேண்டும்

வைகோ வாதிடும்போது, கேரளத்தில் சீமைக் கருவேல மரங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒருபிடி மண்ணைக்கூட அள்ள முடியாது. கட்டிடப் பணிக்குத் தேவையான மண்ணை, தமிழகத்தில் இருந்து பெறுகின்றனர். கேரளத்தில் இயற்கையை பாதுகாப்பதில் அரசியல்வாதிகள், பொதுமக்கள், அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். அவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x