

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “திருவொற்றியூரில் இயங்கி வரும் கேடிவி ஆயில் மில், தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் கேடிவி ஹெல்த் ஃபுட் ஆகிய சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி நிறுவப்பட்டுள்ளன. எனவே இந்நிறுவனங்களை மூட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த அமர்வு, இந்நிறுவனங்களை மூட உத்தரவிட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதற்காக கேடிவி ஆயில் மில் நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம்அபராதம் விதித்தது. அதன் பின்னர் அந்நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று இயங்கத்தொடங்கின. அதை எதிர்த்து மனுதாரர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
விதிகளை மீறி இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுச் சூழல்அனுமதி ரத்து செய்யப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடங்களில் கட்டப்பட்ட எண்ணெய் சேமிப்பு கட்டுமானங்களை, தொடர்புடைய நிறுவனம் 3 மாதங்களில் அகற்ற வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பைஏற்படுத்தியதற்காக கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை 2 மாதங்களுக்குள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.