Published : 01 Oct 2020 07:21 AM
Last Updated : 01 Oct 2020 07:21 AM

லடாக் எல்லையில் நிலைமை முன்பு போல் இல்லை: சீனாவை தெறிக்கவிடுகிறது இந்திய ராணுவம்

புதுடெல்லி

கடந்த 2004-ம் ஆண்டில் சீன எல்லை விவகாரம் தொடர்பாக அப்போதைய ராணுவ துணை தளபதி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்றைய மத்திய உள்துறை செயலாளர், "எல்லையில் ஏன் சாலை வசதிகளை மேம்படுத்தவில்லை" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அளிக்கப்பட்ட பதில் உள்துறை செயலாளரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

"எல்லையில் சாலைகளை அமைத்தால் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊருடுவ வசதியாக அமைந்துவிடும்" என்று பதில் அளிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த உள்துறை செயலாளர், "அப்படியென்றால் டெல்லியில் கூட சாலை அமைக்க முடியாதே" என்று கண்டித்தார்.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லடாக் எல்லையில் காட்சிகள் முழுமையாக மாறியுள்ளன. சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் 15-ம் தேதி மோதலில் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட 20 இந்திய வீரர்கள், வீர மரணமடைந்தனர்.இந்திய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலில் சீன தரப்பில் 40 முதல் 60 வீரர்கள் வரை உயிரிழந்திருப்பதை அமெரிக்க உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அவர்களின் மரணத்தை சீன ராணுவம் இதுவரை மறைத்து வருகிறது. உயிரிழந்த சீன வீரர்களுக்கு உரிய மரியாதையை அந்த நாட்டு ராணுவமும் வழங்கவில்லை. சீன அரசும் வழங்கவில்லை. இது சீன வீரர்களின் மனஉறுதியை குலைத்துள்ளது.

சீனாவில் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் ராணுவத்தில் கண்டிப்பாக 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். தற்போது லடாக் எல்லையை ஒட்டிய அகாய் சின் பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் பெரும்பாலான வீரர்கள், 18 வயதே நிரம்பிய மாணவர்கள்.

போர்ப் பயிற்சிக்காக இந்திய எல்லைக்கு வாகனத்தில் அனுப்பப்பட்ட இந்த மாணவ வீரர்கள், அழுது கொண்டே ராணுவ கீதத்தை பாடிய வீடியோ உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி சர்வதேச அளவில் கேலி, கிண்டலுக்கு ஆளானது.

சீன அதிபரும் அந்த நாட்டு ராணுவத்தின் தலைவருமான ஜி ஜின்பிங் தப்புக்கணக்கு போட்டு லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற உத்தரவிட்டார். ஆனால் ஓர் அடி கூட முன்னேற முடியாமல் சீன ராணுவம் மூக்குடைந்து நிற்கிறது.

கடந்த ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை, இந்தியாவின் சிறப்பு படை வீரர்கள் விரட்டியடித்தனர். அங்குள்ள முக்கிய மலைமுகடுகள் தற்போது இந்திய ராணுவத்தின் வசமாகியுள்ளன. அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்தியா ஆதிக்க நிலையில் உள்ளது.

லடாக் எல்லையில் இரு நாடுகளும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வைத்துள்ளன. அங்கு குளிர்காலம் தொடங்கியிருப்பதால் இரவில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரிலும் இந்திய வீரர்கள் நெஞ்சுறுதியோடு எல்லையில் எதற்கும் தயார் நிலையில் உள்ளனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் சீனாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் தொழில் விசா பெற்று இந்தியாவுக்கு வந்தனர். மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் சீனாவின் மாண்டரின் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. திபெத் ஆக்கிரமிப்பு விவகாரம் நீர்த்துப் போனது.

இதன் விளைவாக இந்தியாவில் ஏராளமான சீன நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கால் பதித்துள்ளன. திரைமறைவு சீன நிறுவனங்களின் வேர்களை, இந்தியா தேடி கண்டுபிடித்து வருகிறது. இதுவரை சுமார் 224 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தென் கொரியாவை சேர்ந்த பப்ஜி செயலியும் அடங்கும். அந்த செயலி தென் கொரியாவை சேர்ந்ததாக இருந்தாலும் அதில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் சித்ரவதை முகாம்களில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இதுதொடர்பாக எந்தவொரு முஸ்லிம் நாடும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை. இதற்கு சீனாவின் பண பலம் முக்கிய காரணமாகும்.

லடாக் மட்டுமன்றி தென் சீனக் கடல் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தீவிரமாக முயற்சி செய்கிறது. தைவானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர துடிக்கிறது. ஜப்பானுக்கு சொந்தமான சென்காகு தீவுவை அபகரிக்க முயற்சிக்கிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது உலகம் மவுனம் காத்தது இப்போது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி 100-வது ஆண்டை கொண்டாட உள்ளது. இந்த நேரத்தில், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி உலகின் ஒற்றை வல்லரசாக சீனாவை உருமாற்ற அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வியூகம் வகுத்து வருகிறார். இதை உலகம் உன்னிப்பாகக் கண்காணித்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை, இந்தியாவின் சிறப்பு படை வீரர்கள் விரட்டியடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x