

நீதிமன்ற புறக்கணிப்பு போராட் டத்தின்போது பட்டியலிடப்பட்ட வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் அதுகுறித்து கீழமை நீதிமன்றங்கள் பதிவு செய்வதுடன், உரிய நடவடிக்கை எடுக்கும்படி இந்திய பார் கவுன்சிலுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் காசோலை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிய மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் போராட்டம் தொடர் பாக சில கருத்துகளை தெரிவித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என்ற பெயரில் நீதிமன்ற நடவடிக்கைகளை குலைக்க வழக்கறிஞர்களுக்கு உரிமை இல்லை என்று வழக்கறிஞர்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக தங்கள் வழக்க றிஞர் விசாரணைக்கு ஆஜராக வில்லையென்றால், அதற்கான இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம். புறக்கணிப்பு போராட்டத்தின் போது, கோட் அணியாமல் நீதிமன்றத்துக்குள் நுழைந்து வழக்கு குறித்து வழக்கறிஞர்கள் முறையீடு செய்யக்கூடாது.
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தின்போது குறிப்பிட்ட நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால், அதுகுறித்து கீழமை நீதிமன்றம் பதிவு செய்வதுடன், உரிய நடவடிக்கை எடுக்கும்படி அகில இந்திய பார் கவுன்சிலுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, வழக்கு தொடர்ந்தவர்களும் இப்பிரச்சினையை இந்திய பார் கவுன்சில் கவனத்துக்கு கொண்டு போக முடியும். இந்த உத்தரவு நகலை உரிமையியல் மற்றும் குற்றவழக்குகளைக் கையாளும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் பதிவுத்துறை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி எஸ்.வைத் தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.