

தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிறைவு நாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறையின் சார்பில் கோவையில் நடந்த ஊட்டசத்து விழிப்புணர்வுக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி பார்வையிட்டார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து பாதுகாப்புக் குறித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் போக்ஷன் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிறைவு நாளை முன்னிட்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டசத்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியில் கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் காய்கறித் தோட்டம் அமைக்கவும், அங்கன்வாடி மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்கவும் காட்சிகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊழியர்களால் விளக்கங்கள் தரப்பட்டன.
அங்கன்வாடி மையத்தில் படிக்கும் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பொட்டுக்கடலை, பேரிச்சம்பழம், வாழைப்பழம், நெய், கரும்பு, சர்க்கரை அடங்கிய ஊட்டசத்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வயிற்றுக்போக்குக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு, ஊட்டசத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வும், பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு குறித்த கண்காட்சியினை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி பார்வையிட்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் திட்ட அலுவலர் மீனாட்சி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.