Published : 30 Sep 2020 09:04 PM
Last Updated : 30 Sep 2020 09:04 PM

ராம கோபாலன் மரணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஸ்டாலின், ராமதாஸ், கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் (94), நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப்பலனின்றி காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிந்தாதிரிப்பேட்டை இந்துமுன்னணி அலுவலகத்தில் வைக்கப்பட்டு நாளை காலை திருச்சி சீராத்தோப்பு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம கோபாலன் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி இரங்கல்:

இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம கோபாலன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (30.9.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

ராம கோபாலன் அவர்கள் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். ராம. கோபாலனை இழந்து வாடும், அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராம கோபாலனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் மு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தெலங்கான ஆளுநர் தமிழிசையின் இரங்கல் செய்தி:

கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்துவதிலும் உறுதியாக இருந்து தன் வாழ்க்கையை உறுதியாக தடம் பதித்த ராம கோபாலன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”.

இவ்வாறு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்:

“இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர், பெரியவர் ராம கோபாலன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், தலைவரும், ராம கோபாலனும், நல்ல நண்பர்களே. அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன்.

இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில் கூட, தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்தக் “கொள்கைச் சுதந்திரம்” இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை.

ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை:

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல்நலக் குறைவால் இன்று (30.9.2020) தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். கொள்கையில் நேர் எதிர்நிலையில் இருந்தாலும் மனிதநேய அடிப்படையில் சந்திக்கும் போதெல்லாம் அன்புடன் நலம் விசாரித்துக் கொள்ளும் பண்பு எங்கள் இருவரிடமும் உண்டு.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், அவரது அமைப்பினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்”.

இவ்வாறு கி.வீரமணி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்:

“இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரும், மூத்த ஆன்மிகவாதியுமான ராம கோபாலன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்து மதம் மீதும், அதன் நம்பிக்கைகள் மீதும் பற்று கொண்ட ராம கோபாலன் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவற்றை பரப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். அவர் கொண்ட கொள்கைகளில் சமரசமின்றி செயல்பட்டு வந்தவர்.

ஆன்மிகவாதி ராம கோபாலனை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் இரங்கலில் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் இரங்கல் செய்தி:

“ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர், பெரியவர் ராம கோபாலன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x