

முக்கியத்துவம் வாய்ந்த மதுரை தாலுகா வேளாண் கூட்டுறவுசங்கத் தேர்தல் இன்று நடக்க இருந்தநிலையில் அதிமுக, அமமுக கட்சியினர் மோதலால் ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 8923 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்திற்கு 11 நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்
வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அமமுக- அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அமமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்ததற்க்கான ஒப்புகைச் சீட்டை அதிகாரிகள் வழங்கவில்லை என்று கூறி அக்கட்சி மாவட்ட செயலாளர் மா.ஜெயபால் தலைமையில் அமமுகவினர் தேர்தல் அதிகாரியை கண்டித்து அரசரடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பும் அப்பகுதியில் குவிந்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவிப்புப் பலகையில் நோட்டீஸ் ஒட்டினார். அதனால், ஏமாற்றமடைந்த இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
இதேபோல் மதுரை மேலூர் வேளாண் கூட்டுறவு சங்க நிர்வாக்குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுவதாக இருந்த நிலையில் காலையில் அமமுக - அதிமுக என இரு தரப்பிலும் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது சட்ட ஒழங்கை காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைப்பதாக கூறி தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து தேர்தல் அதிகாரி தொடர்ந்து தேர்தலை நடத்தாமல் புறக்கணிப்பதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மேலூர் காவல்நிலையத்தில் அமமுக மாவட்டச் செயலாளர் செ.சரவணன், மற்றும் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் செல்வராஜ் புகார் அளித்தார்.
விவசாயக் கடன் மற்றும் விவசாயம் சார்ந்த கடன்கள் உள்ளிட்ட அதிக அளவில் கடன்கள் வழங்குவது கூட்டுறவு சங்கமாக இருப்பதால் இந்த கூட்டுறவு சங்க தேர்தல்களில் தலைவர் பதவிக்கு கடுமையாக போட்டி நிலவுகிறது.
அமமுக மற்றும் அதிமுகவினர் மத்தியில் இந்தப் பதவிகளை கடும் போட்டி நிலவிவரும் நிலையில் இந்தக் கூட்டுறவு சங்க தேர்தலகள் 4 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.